தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 136 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். அதோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய மிதாலி ராஜின் சாதனையை 7 சதங்கள் விளாசி சமன் செய்தார். இதே போன்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அன்னேக் போஷ் 18 ரன்கள் எடுக்கவே, சுனே லூஸ் 12 ரன்கள் எடுத்தார். நாடின் டி கிளர்க் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மரிசன்னே கேப் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர், 94 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி வரை விளையாடிய கேப்டன் லாரா வால்வார்ட் 135 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடையாக தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி வரும் 23 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா விராட் கோலியைப் போன்று பந்து வீசி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்து சாதனை படைத்துள்ளார்.