ஸ்மித், வார்னர், பாட் கம்மின்ஸ் ஐபிஎல்லில் ஆடமுடியாது..? ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published May 22, 2020, 8:05 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள், ஐபிஎல்லா உள்நாட்டு போட்டியா என்ற நிலை வந்தால், ஐபிஎல்லை புறக்கணித்து உள்நாட்டு போட்டிகளில் தான் ஆட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
 

கொரோனாவால், மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களும் ரசிகர்களும் இல்லாமல் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை. ரூ.4000 கோடி வருவாய் இழப்பை சந்திக்க விரும்பாத பிசிசிஐ, ஐபிஎல்லை நடத்தும் முடிவில் உள்ளது. 

இதற்கிடையே, வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி தொடங்குவதாக அட்டவணைப்படுத்தப்பட்ட டி20 உலக கோப்பை, கொரோனாவால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் பட்சத்தில், அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. டி20 உலக கோப்பை தள்ளிப்போனால், அக்டோபரில் ஐபிஎல்லை பிசிசிஐ நடத்தியே தீரும்.

அந்த காலக்கட்டத்தில் தான் ஆஸ்திரேலியாவில் ஷெஃபில்டு ஷீல்டு உள்ளிட்ட உள்நாட்டு தொடர்கள் நடைபெறும். ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு தொடர் நடக்கும் நேரத்தில் ஐபிஎல் நடத்தப்பட்டால், ஸ்மித், வார்னர், கம்மின்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், ஐபிஎல்லை புறக்கணித்து உள்நாட்டு தொடரில் ஆட வேண்டும் என இயன் சேப்பல் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய இயன் சேப்பல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியின் முன்னணி வீரர்களை நிதியளவில் நன்றாகவே வைத்துள்ளது. முன்னணி வீரர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டும் ஐபிஎல்லும் ஒரே நேரத்தில் நடந்தால், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஐபிஎல்லை புறக்கணித்து, உள்நாட்டு கிரிக்கெட்டில் தான் ஆட வேண்டும்.

முன்னணி வீரர்கள் அல்லாத மற்ற வீரர்களுக்கு சம்பளம் குறைவுதான். எனவே அவர்கள் ஐபிஎல்லில் ஆடுவதில் இருக்கும் நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் அவர்களை நான் தடுக்கவில்லை. ஆனால் முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா வீரர்கள் ஐபிஎல்லை புறக்கணித்தால் பிசிசிஐ கண்டிப்பாக பழிவாங்கும். ஏனெனில் இப்போதைக்கு, இந்தியா - ஆஸ்திரேலியா தவிர சிறந்த டெஸ்ட் அணிகள் நிறைய கிடையாது. அதனால் பிசிசிஐ பழிவாங்கும். ஆனாலும், சர்வதேச கிரிக்கெட், பிசிசிஐ-யால் இயங்கவில்லை என்பதை உணர்த்த இதுவே சரியான தருணம் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். 
 

click me!