ஐபிஎல்லில் கேப்டன்சி செய்யாத 3 சர்வதேச கேப்டன்கள்..!

By karthikeyan VFirst Published Jun 7, 2020, 6:31 PM IST
Highlights

ஐபிஎல்லில் கேப்டன்சி செய்யாத 3 முக்கியமான சர்வதேச கேப்டன்கள் யார் யார் என்று பார்ப்போம். 
 

ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. உலகின் பணக்கார டி20 லீக் தொடரான ஐபிஎல்லில் ஆட வெளிநாட்டு வீரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 

ஐபிஎல் அணிகளுக்கு கேப்டன்சி செய்யும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சர்வதேச அணிகளை வழிநடத்தாத சில வீரர்கள் கூட ஐபிஎல்லில் கேப்டனாக இருந்துள்ளனர். 

ஐபிஎல் அணிகளுக்கு தோனி, ஷேன் வார்ன், சச்சின் டெண்டுல்கர், ஆடம் கில்கிறிஸ்ட், ராகுல் டிராவிட், கங்குலி, அனில் கும்ப்ளே, ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா, விராட் கோலி, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஜார்ஜ் பெய்லி, சேவாக், கவுதம் கம்பீர், ரஹானே, கேன் வில்லியம்சன் என பல உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக இருந்து அணிகளை வழிநடத்தியுள்ளனர். 

ஆனால் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களாகவும், ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களாகவும் திகழ்ந்தாலும், ஐபிஎல்லில் கேப்டன்சி செய்யாத 3 சர்வதேச கேப்டன்கள் யார் யார் என்று பார்ப்போம்.

1. டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். டிவில்லியர்ஸின் கேப்டன்சியில் தான் தென்னாப்பிரிக்க அணி 2015 உலக கோப்பையில் அரையிறுதி வரை வென்று தோற்றது. தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவான டிவில்லியர்ஸ், ஆர்சிபியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார்.

ஐபிஎல்லில் 40 ரன்கள் சராசரியுடன் 4395 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் அவரது ஸ்டிரைக் ரேட் 150க்கும் அதிகம். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடுவதால், மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் டிவில்லியர்ஸ், ஐபிஎல்லில் கேப்டனாக செயல்பட்டதில்லை. ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி என்ற மாபெரும் சக்தி இருப்பதால், டிவில்லியர்ஸுக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை. 

2. லசித் மலிங்கா

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டெத் ஓவர்களில் அருமையாக வீசி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து அந்த அணியின் ஆஸ்தான வீரராக திகழ்பவர் மலிங்கா. கடந்த சீசனில்(2019) கூட கடைசி ஓவரில் அருமையாக பந்துவீசி த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான மலிங்கா, ஐபிஎல்லில் கேப்டனாக செயல்பட்டதில்லை.ரோஹித் சர்மா என்ற வலுவான கேப்டனை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருப்பதால், அந்த அணியில் ஆடும் மலிங்காவிற்கு ஐபிஎல் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

3. கிறிஸ் கெய்ல்

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் முக்கியமானவர் கிறிஸ் கெய்ல். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனான கெய்லும், ஐபிஎல்லில் கேப்டனாக செயல்பட்டதில்லை. ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ள கெய்லுக்கு கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர்(175), அதிகமான சிக்ஸர்கள் ஆகிய சாதனைகளுக்கு சொந்தக்காரரான கெய்ல், ஐபிஎல்லில் 4484 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!