ஐபிஎல் 13வது சீசன் கண்டிப்பா நடக்கும்.. ஆனால் இந்தியாவில் இல்லை..?

By karthikeyan VFirst Published Jun 7, 2020, 2:45 PM IST
Highlights

ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியிருப்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. 
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டன. ஐபிஎல் உட்பட அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல், கொரோனாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் என தகவல் வெளியானதையடுத்து, அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இப்போதைக்கு ஐபிஎல் குறித்து எந்த திடமான முடிவும் எடுக்க முடியாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டார். 

இதற்கிடையே, ஐபிஎல்லை தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளன. இலங்கையில் முழு பாதுகாப்புடன் ஐபிஎல்லை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், அதனால் இலங்கையில் நடத்த அனுமதியளிக்குமாறும் பிசிசிஐ-க்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் வாரியமும், தங்கள் நாட்டில் ஐபிஎல்லை நடத்த அனுமதியளிக்குமாறு பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே 2009ம் ஆண்டு ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடத்தப்பட்டது. எனவே ஐபிஎல்லை வெற்றிகரமாக நடத்திய அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு உள்ளது. 

பிசிசிஐ-யிடம் ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி கோரியதை உறுதிப்படுத்தியுள்ளார் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் முபாஷிட் உஸ்மானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உஸ்மானி, கடந்த காலத்தில் ஐபிஎல்லை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். அதேபோல இருதரப்பு, முத்தரப்பு கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட பல தொடர்களை சிறப்பாக நடத்தியிருக்கிறோம். எல்லாவிதமான கிரிக்கெட் தொடர்களையும் நடத்திய அனுபவம் கொண்ட எங்களால் ஐபிஎல்லை சிறப்பாக நடத்தமுடியும் என உஸ்மானி தெரிவித்துள்ளார். 

ஆனால் ஐபிஎல்லை இந்தியாவில் நடத்தவே பிசிசிஐ விரும்புகிறது என்பதால், வெளிநாட்டில் நடத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. 
 

click me!