ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங்கில் மட்டும் பிரச்னையல்ல; பேட்டிங் தான் பெரிய பிரச்னையாக இருப்பதாக ஹர்பஜன் சிங் விளாசியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் நல்ல நிலையில் உள்ளன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக ஆடிவருகிறது. அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னரான ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் இந்த சீசனில் ஆடவில்லை. பும்ரா ஆடாததால் மனதளவில் பலவீனமடைந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. அது அந்த அணியின் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது.
ஆனாலும் பும்ராவின் இடத்தை ஆர்ச்சரால் நிரப்ப முடியவில்லை. முதல் போட்டியில் ஆடிய ஆர்ச்சர், சிஎஸ்கேவிற்கு எதிரான 2வது போட்டியில் ஆடவில்லை. ஸ்பின் யூனிட்டிலும் சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னர் யாரும் அணியில் இல்லை. சீனியர் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லாவுடன் இளம் ஸ்பின்னர்களை வைத்து ஆடிவருகிறது. அதனால் பவுலிங் தான் பிரச்னை என்று கருதப்பட்டது.
ஆனால் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என இந்திய அணியின் டாப் அதிரடி வீரர்கள் இருந்தும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் தான் படுமோசமாக சொதப்புகிறது. 2 போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. திலக் வர்மா மட்டுமே மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார். ரோஹித், இஷான் கிஷன், சூர்யகுமார் ஆகிய மூவரில் ஒருவர் கூட சோபிக்காததுதான் அந்த அணியின் பிரச்னையாக உள்ளது.
இந்த சீசனை பொறுத்தமட்டில் மும்பை அணியின் பிரச்னை பவுலிங் மட்டுமல்ல; பெரிய வீரர்கள் இருந்தும் அவர்கள் பேட்டிங் சரியாக ஆடாததுதான் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
IPL 2023: பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் காயம்.. முக்கியமான அப்டேட்..! பீதியில் சிஎஸ்கே
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் தான் பிரச்னை என்று பேசுகிறோம். ஆனால் அந்த அணியின் பேட்டிங்கும் அதிருப்தியளிக்கிறது. பேட்ஸ்மேன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். அப்போதுதான் பவுலர்களால் சிறப்பாக செயல்பட முடியும். அவர்கள் ஃப்ரீயாக ஆடவில்லை. 5 முறை சாம்பியன் ஆடுவதை போல் அவர்கள் ஆடவில்லை. மும்பை அணியில் பெரிய பேட்ஸ்மேன்கள் இருந்தும் பேட்டிங்கில் அதிருப்தியளிக்கிறார்கள் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.