ரோஹித்தோட ரொம்ப நேரம் பேசிட்டு போனதுக்கு அப்புறம் அடித்த சதம்.. ஹனுமா விஹாரி சொல்லும் ரகசியம்

By karthikeyan VFirst Published Sep 23, 2019, 2:37 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான நிரந்தரமான இடத்தை பிடித்துவிட்ட ஹனுமா விஹாரி, தனது முதல் சதம் அடிப்பதற்கு முன்னதாக ரோஹித் சர்மாவுடன் நீண்டநேரம் பேசியது குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதுடன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து டெஸ்ட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார் ஹனுமா விஹாரி. 

ஹனுமா விஹாரி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே நன்றாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணங்களில் இடம்பெற்று ஆடினார் ஹனுமா விஹாரி. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றிருந்தும் கூட, ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாமல் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஹனுமா விஹாரியை ஆடவைத்ததை யாரும் விமர்சிக்கவில்லை என்றாலும், ரோஹித் சர்மா புறக்கணிப்பிற்கு கவாஸ்கர், கங்குலி, அசாருதீன், கம்பீர் உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியிலும் ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடவில்லை என்றாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ரோஹித் தான் தொடக்க வீரர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹனுமா விஹாரி அபாரமாக ஆடி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். பொறுப்பற்றத்தனமாக ஆடாமல், பொறுப்புடன் முதிர்ச்சியான ஆட்டத்தை ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தை நெருங்கிய விஹாரி, 93 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து 111 ரன்களை குவித்தார். அந்த இன்னிங்ஸுக்கு முன்னதாக வெகுநேரம் ரோஹித் சர்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். ஹனுமா விஹாரி டைம்ஸ் நவ் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ரோஹித் சர்மாவுடன் நீண்டநேரம் பேசியது குறித்தும், அது எந்த வகையிலாவது அவருக்கு உதவிகரமாக அமைந்ததா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஹனுமா விஹாரி, மனநிலையை பற்றி ரோஹித் சர்மா பேசிக்கொண்டிருந்தார். அவர் கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் ஆடிவருகிறார். எனவே பேட்டிங் ஆட செல்லும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் என்னிடம் பகிர்ந்துகொண்டார். மேலும் எனது பேட்டிங் டெக்னிக் நன்றாக இருப்பதாக ஊக்கப்படுத்திய ரோஹித், சர்வதேச கிரிக்கெட்டில் நான் ஜொலிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டினார். அது மிகவும் நீளமான ஆரோக்கியமான ஓர் உரையாடல். எனது நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் என்னை ஊக்கப்படுத்தினார் ரோஹித் என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். 
 

click me!