ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 136 ரன்கள் என்ற எளிய இலக்கை அடிக்க முடியாமல் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.
ஐபிஎல் 16வது சீசனில் சனிக்கிழமையான இன்று(ஏப்ரல் 22) 2 போட்டிகள். இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
லக்னோவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோஹித் சர்மா.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, 3ம் வரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர். ரிதிமான் சஹா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, அதன்பின்னர் இறங்கிய அபினவ் மனோகர் (2), விஜய் சங்கர் (10), டேவிட் மில்லர் (8) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 பந்தில் 66 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் தான் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட 12 பந்தில் அவரால் 8 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. பாண்டிய, சஹாவை தவிர வேறு யாரும் சரியாக ஆடாததால் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
136 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - கைல் மேயர்ஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவரில் 55 ரன்கள் அடித்தனர். கைல் மேயர்ஸ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய க்ருணல் பாண்டியா மந்தமாக ஆடி 23 பந்தில் 23 ரன்கள் மட்டுமே அடித்தார். 10 ஓவரில் 80 ரன்கள் அடித்திருந்த லக்னோ அணி, அதன்பின்னர் மந்தமாக ஆடியது. மந்தமாக பேட்டிங் ஆடிய க்ருணல் பாண்டியா 15வது ஓவரில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பூரன் ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, அதன்பின்னர் ஆயுஷ் பதோனி களமிறங்கினார். களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்த ராகுல், மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தியிருந்தால் விரைவில் இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்திருக்கலாம். ஆனால் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்ற ராகுல் 68 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை மோஹித் சர்மா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் ராகுலை 2வது பந்தில் வீழ்த்தினார் மோஹித். அதற்கடுத்த 3வது பந்திலேயே மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆயுஷ் பதோனி மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் ரன் அவுட்டாக, 20 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது லக்னோ அணி.
135 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய லக்னோ அணி, கையில் இருந்த ஆட்டத்தை கோட்டைவிட்டு 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது.