மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான 16ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் லாரா வால்வார்ட் மற்றும் பெத் மூனி இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி ரன்கள் குவித்தனர். இதில், லாரா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு கேப்டன் பெத் மூனியுடன் இணைந்த தயாளன் ஹேமலதா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதன் காரணமாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
கேப்டன் பெத் மூனி 35 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த போப் லிட்ச்பீல்டு 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஷ்லேக் கார்ட்னர் ஒரு ரன்னில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த ஹேமலதா 40 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்வரிசை வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாரதி ஃபுல்மாலி 21 ரன்கள் சேர்த்தார். இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் சைகா இஷாக் 2 விக்கெட்டும், சஜீவன் சஞ்ஜனா, பூஜா வஸ்த்ரேகர், ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.