Virat Kohli: கேப்டன்சி யாருடைய பிறப்புரிமையும் கிடையாது..! கோலி விஷயத்தில் கம்பீர் கறார்

By karthikeyan VFirst Published Jan 17, 2022, 5:45 PM IST
Highlights

கேப்டன்சி ஒன்றும் யாருடைய புறப்புரிமையும் கிடையாது என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலியை, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து பிசிசிஐ நீக்கியது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர், திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்தும் விலகினார் விராட் கோலி.

விராட் கோலியின் இந்த திடீர் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. கடந்த 2 ஆண்டுகளாக பேட்டிங்கில் ஜொலிக்கமுடியாமல் திணறிவரும் விராட் கோலிக்கு இனி கேப்டன்சி அழுத்தம் இருக்காது என்பதால், அவரால் முழுக்க முழுக்க அவரது பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேம் பிளான் நிகழ்ச்சியில், விராட் கோலி இனி புதிதாக என்ன எதிர்பார்க்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கௌதம் கம்பீர், புதிதாக என்ன பார்க்க விரும்புகிறீர்கள்? கேப்டன்சி ஒன்றும் யாருடைய பிறப்புரிமையும் இல்லை. தோனி கோலியிடம் கேப்டன்சியை கொடுத்துவிட்டு, கோலிக்கு கீழ் ஆடினார். 3 சர்வதேச கோப்பைகள் மற்றும் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற தோனியே, கேப்டன்சியை உதறிவிட்டு கோலியின் கேப்டன்சியில் ஆடியிருக்கிறார்.

கோலி நன்றாக பேட்டிங் ஆடி அதிக ஸ்கோர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம் என கருதுகிறேன். இந்தியாவிற்காக ஆட  கனவு காணும்போது, கேப்டன்சியை பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. இந்தியாவிற்காக வெற்றிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வேட்கை என்றுமே மாறாது. விராட் கோலி இனிமேல் டாஸ் போட களத்திற்கு போகமாட்டாரே தவிர, மற்ற எதுவுமே மாறாது. இந்தியாவிற்காக ஆடி அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுக்கும் வேட்கை அப்படியே தான் இருக்க வேண்டும்.

கேப்டனாக இருக்கும்போது எப்படி 3ம் வரிசையில் இறங்கி ஏகப்பட்ட ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தாரோ, அதையே தான் செய்ய வேண்டும். எனவே நான் ஏற்கனவே சொன்னதை போல, கோலி டாஸ் போட மட்டும் போகமாட்டார். அவ்வளவுதானே தவிர, அவரது ரோலில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றார் கம்பீர்.
 

click me!