Virat Kohli: பிசிசிஐ கொடுத்த செம ஆஃபரை ஏற்க மறுத்த விராட் கோலி..?

By karthikeyan VFirst Published Jan 17, 2022, 4:27 PM IST
Highlights

பிசிசிஐ கொடுத்த ஆஃபரை விராட் கோலி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து தன்னை நீக்கியதால் அதிருப்தியில் இருந்த விராட் கோலி, திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார். டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை ஒருநாளைக்கு முன்பாகவே அணி வீரர்களிடம் விராட் கோலி தெரிவித்துவிட்டார். அதன்பின்னர் பிசிசிஐயிடம் தெரிவித்தார்.

விராட் கோலி இதுவரை 99 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அடுத்து அவர் ஆடும் போட்டி அவரது 100வது டெஸ்ட். இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. பிப்ரவரி மாதத்தின் பிற்பாதியில்  இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் போட்டி பெங்களூருவில் நடக்கிறது.

பெங்களூருவில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிதான் விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலிக்கு பெங்களூரு 2வது வீடு போன்றது. எனவே பெங்களூருவில்  அவர் ஆடும் 100வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திவிட்டு, அத்துடன் கேப்டன்சியிலிருந்து விலகலாம் என்ற ஆஃபரை பிசிசிஐ கோலிக்கு அளித்துள்ளது.

ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று விராட் கோலி அந்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!