
இந்தியாவில் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில், கடந்த சீசன் வரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் காம்பீர் இந்த சீசன் முதல் தனது வீடான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த சீசனுக்கான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியான கவுதம் காம்பீர் தன்னை அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்கும்படி பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து கவுதம் காம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது அரசியல் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இதனால், வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்பான பொறுப்புகளில் என்னால் முழு கவனம் செலுத்த முடியும். எனக்கு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசியலில் இணைந்த கவுதம் காம்பீர், பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்பதை புரிந்து கொண்ட கவுதம் காம்பீர் கிரிக்கெட் அது இது என்று காரணம் சொல்வதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.