இந்திய டி20 அணியில் ரோஹித், ராகுல் ஆகிய இருவரையுமே சேர்க்காமல், பிரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக இறக்குமாறு கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
2021 டி20 உலக கோப்பை, 2022 ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பை என தொடர்ச்சியாக அடுத்தடுத்து பெரிய ஐசிசி டி20 தொடர்களில் தோற்று இந்திய அணி அதிருப்தியளித்தது. சரியான அணியை தேர்வு செய்யாதது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம்.
அதைவிட முக்கியமான காரணம் என்றால், பவர்ப்ளேயில் இந்திய அணியின் மந்தமான அணுகுமுறை தான். பவர்ப்ளேயில் அடித்து ஆடி முடிந்தவரை நிறைய ஸ்கோர் அடித்து மிகச்சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தால் தான் டி20 போட்டியில் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். ஆனால் இந்திய அணி பவர்ப்ளேயில் பெரியளவில் அதிரடியாக ஆடாததால் பெரிய ஸ்கோரை அடிக்கமுடியாமல் தோல்விகளை தழுவியது.
மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்
எனவே டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறையை மாற்ற வேண்டியிருப்பதால், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியாக கட்டமைக்கப்படுகிறது. டி20 உலக கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்களும் டி20 அணியில் இடம்பெறவில்லை.
வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெறாத பிரித்வி ஷா, உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக பிரித்வி ஷாவிற்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஜோடி குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், பிரித்வி ஷா அபாரமான தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுக்கவல்லவர். ஓபனிங்கிற்கு அவர்தான் சரியான வீரர். பிரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் ஓபனிங்கிலும், 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவும் இறங்கினால் சரியாக இருக்கும். பிரித்வி ஷா இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்து ஆடவைக்க வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் அவரது ஆட்டத்தை மதிப்பீடு செய்யக்கூடாது. அவர் மேட்ச் வின்னர். அவருக்கு தொடர் வாய்ப்பளிக்க வேண்டும். ஷுப்மன் கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டும். பிரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் டி20 அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ஆடவேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.