#INDvsENG முதல் டெஸ்ட்: இந்திய அணி தேர்வு தவறு.. அவருக்கு பதிலா இவரைத்தான் எடுத்திருக்கணும்..! கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 5, 2021, 2:18 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் பும்ராவுடன், 2வது ஃபாஸ்ட் பவுலராக இஷாந்த் சர்மாவை எடுத்ததற்கு பதிலாக முகமது சிராஜைத்தான் எடுத்திருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சென்னையில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 2 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளது. ஸ்பின்னர்களாக அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகிய மூவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

சீனியர் பவுலராக இருந்தாலும் கூட, இந்த டெஸ்ட்டில் இஷாந்த் சர்மாவை எடுத்தது தவறான முடிவு என கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸி.,யில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்ததுடன், நல்ல டச்சில் அருமையாக வீசிக்கொண்டிருக்கும் முகமது சிராஜைத்தான் எடுத்திருக்க வேண்டும் என்பது கம்பீரின் கருத்து.

ஆஸி., சுற்றுப்பயணத்தில் மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில் அறிமுகமான முகமது சிராஜ், அந்த தொடரில் 3 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையுடன் ஆஸி., தொடரை முடித்தார். ஆனால் அதேவேளையில், காயத்தால் ஆஸி., தொடரில் ஆடாத இஷாந்த் சர்மாவோ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி நீண்டகாலம் ஆகிவிட்டது. எனவே சிராஜைத்தான் சேர்த்திருக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், நான் சிராஜைத்தான் எடுத்திருப்பேன். காரணம் என்னவென்றால், இஷாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி நீண்டகாலம் ஆகிவிட்டது. ஐபிஎல்லில் ஆடும்போதே காயத்தால் வெளியேறினார். அதன்பின்னர் வெறும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அணியில் 3வது ஃபாஸ்ட் பவுலர் இருந்தால் ஒருநாளைக்கு 12-13 ஓவர்கள் வீசவேண்டும். 3வது ஃபாஸ்ட் பவுலரும் கிடையாது. எனவே கூடுதல் ஓவர்கள் வீச வேண்டும். டி20 போட்டிகளில் ஆடுவது எளிது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீசுவது கடினம். 

மொடேரா ஸ்டேடியத்தில் நடக்கும் பகலிரவு(3வது டெஸ்ட்) டெஸ்ட் போட்டியில் 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடவேண்டும். எனவே அதற்கு தயார்படுத்தும் விதமாக சிராஜைத்தான் எடுத்திருக்க வேண்டும். அதுவும், இப்போதுதான் சிராஜ் ஆஸி.,யில் அருமையாக பந்துவீசிவிட்டு வந்திருக்கிறார். நீண்ட ஸ்பெல்களை எல்லாம் கூட வீசியிருக்கிறார். எனவே சென்னை டெஸ்ட்டில், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜைத்தான் எடுத்திருக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!