#INDvsENG முதல் டெஸ்ட்டுக்கான தொடக்க ஜோடி, விக்கெட் கீப்பரை அறிவித்த கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Feb 4, 2021, 10:02 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் தொடக்க ஜோடி மற்றும் விக்கெட் கீப்பர் யார் என்பதை உறுதிப்படுத்திவிட்டார் கேப்டன் விராட் கோலி.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஜோடி எது, விக்கெட் கீப்பர் யார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது.

ஏனெனில் ஆஸி., தொடருக்கு முன் ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆனால் ஆஸி., தொடரில் மயன்க் அகர்வால் சோபிக்காத நிலையில், இளம் வீரர் ஷுப்மன் கில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அபாரமாக ஆடி இந்திய அணிக்கு, சவாலான ஆஸி., கண்டிஷனில் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து தனது பணியை செவ்வனே செய்தார். எனவே ரோஹித்துடன் தொடக்க வீரராக மயன்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில், ஷுப்மன் கில் தான் என்பதை உறுதிப்படுத்திவிட்டார் கோலி.

முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, ரோஹித் மற்றும் கில்லுக்கு நீண்டகால வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம். நாங்கள் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் அவர்களிடமிருந்து நல்ல தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம் என்றார் கோலி.

அதேபோல விக்கெட் கீப்பர் குறித்த கேள்வியும் இருந்தது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால், தரமான விக்கெட் கீப்பருக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். அந்தவகையில், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும்போது ரிதிமான் சஹா தான் விக்கெட் கீப்பராக இருப்பார். ஆனால் ஆஸி., தொடரில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, தொடரை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார் ரிஷப் பண்ட். எனவே இங்கிலாந்துக்கு எதிராக யார் விக்கெட் கீப்பர் என்பது கேள்வியாக இருந்த நிலையில், அதுகுறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார் கோலி.

இதுகுறித்து பேசிய விராட் கோலி, ரிஷப் பண்ட் தான் முதல் டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர். சமீபத்தில் அவர் ஆடிய விதம் அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவர் தொடர்ந்து இந்திய அணியின் மேட்ச் வின்னராக ஜொலிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் அவரே விக்கெட் கீப்பராக தொடர்வார் என்று கோலி தெரிவித்தார்.
 

click me!