#BBL சேலஞ்சர் மேட்ச்சில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

By karthikeyan VFirst Published Feb 4, 2021, 9:20 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் சேலஞ்சர் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கில் ஃபைனலுக்கு தகுதிபெறும் 2வது அணியை தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டி கான்பெராவில் இன்று நடந்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் லிவிங்ஸ்டோன் மற்றும் பான்க்ராஃப்ட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 11 ஓவரில் 114 ரன்களை குவித்தனர்.

39 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 77 ரன்கள் அடித்து 12வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பான்க்ராஃப்ட்டுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பான்க்ராஃப்ட்டும் அரைசதம் அடித்தார். பான்க்ராஃப்ட் 42 பந்தில் 58 ரன்களும், மிட்செல் மார்ஷ் 28 பந்தில் 49 ரன்களும் அடித்திருந்த நிலையில், 18.1 ஓவரில் மழை குறுக்கிட்டது. 18.1 ஓவரில் வெறும் ஒரு விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது.

மழை குறுக்கீட்டால் ஆட்டம் தாமதமானதால், 18.1 ஓவருடனேயே முதல் இன்னிங்ஸ் முடித்துக்கொள்ளப்பட்டது. அதனால் 18 ஓவரில் 200 ரன்கள் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த கடினமான இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் கிறிஸ் லின், மார்னஸ் லபுஷேன், ஜோ டென்லி ஆகியோர் பதின்களிலும் இருபதிகளிலும் ஆட்டமிழக்க, சீரான இடைவெளியில் பிரிஸ்பேன் ஹீட் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது.

அதன்விளைவாக 18 ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணி 150  ரன்கள் மட்டுமே அடித்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பிரிஸ்பேன் ஹீட் அணியில் அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 38 ரன்கள் அடித்தார். 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

வரும் ஆறாம் தேதி சிட்னியில் நடக்கும் ஃபைனலில் சிட்னி சிக்ஸர்ஸும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸும் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு இந்த போட்டி தொடங்கும்.
 

click me!