
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அனி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சன் ஆட்ட நாயகன் விருதையும், சைமன் ஹார்மர் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். 2000-க்குப் பிறகு இந்தியாவில் தென்னாப்பிரிக்கா வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், ''உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விளையாட்டில் பின்னோக்கிப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. நாங்கள் எடுத்த எந்த முடிவாக இருந்தாலும், அது அணியின் நலனுக்காகவே எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் நாட்டுக்காகவும் அணிக்காகவும் வெற்றியைப் பெற்றுத் தரும் என்று நாங்கள் முழுமையாக நம்பினோம்'' என்றார்.
தொடர்ந்து பேசிய கம்பீர், ''இளம் அணியுடன் இங்கிலாந்திலும் (டெஸ்ட் தொடர் 2 2 என டிரா) வெற்றிகளைப் பெற்ற அதே ஆள்தான் நான். நியூசிலாந்து பற்றி பலர் பேசிக்கொண்டிருப்பதால், நீங்கள் அதை விரைவில் மறந்துவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், என் தலைமையில்தான் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்றது" என்று தெரிவித்தார்.
தனிநபரை குற்றம் சொல்ல முடியாது
மேலும், ''நான் அனைவரிடமிருந்தும் சிறந்ததை எதிர்பார்க்கிறேன். என்னிடமிருந்தும், அந்த அறையில் உள்ள அனைவரிடமிருந்தும் சிறந்ததை எதிர்பார்க்கிறேன். நான் ஒரு தனிநபரிடமிருந்து சிறந்ததை எதிர்பார்க்கிறேன் என்று இங்கு கூறப்போவதில்லை. விஷயம் என்னவென்றால், தரமான அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற விரும்பினால், அனைவரிடமிருந்தும் சிறந்ததை எதிர்பார்க்க வேண்டும்.
அப்படித்தான் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியும். ஒரு தனிப்பட்ட ஷாட்டையோ அல்லது ஒரு தனிநபர் ஒரு குறிப்பிட்ட வழியில் விளையாடியதையோ குறை சொல்லக்கூடாது'' என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.