
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த்த் ஜிண்டால், இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மாற்றுவது குறித்த விவாதத்தை தொடங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் தனி பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் நிலைமை சரியாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: வெற்றிக்கு அருகில் கூட வர முடியவில்லை. சொந்த மண்ணில் முழுமையான தோல்வி.
நமது டெஸ்ட் அணி சொந்த நாட்டில் இவ்வளவு பலவீனமாக இருந்ததை நான் நினைத்துப் பார்க்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு சிறப்பு ரெட்-பால் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. ரெட்-பால் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களைத் தேர்ந்தெடுக்காதபோது தவறு நேரக்கூடாது'' என்று அவர் கூறினார்.
கம்பீர் தலைமையில் மோசம்
கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகள், 10 தோல்விகள் மற்றும் இரண்டு டிராவை பெற்றுள்ளது. இதன் விளைவாக, வெற்றி விகிதம் 37 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கம்பீர் தலைமையில் இந்தியா சில வெற்றிகளையும் பெற்றுள்ளது. பலவீனமான வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆனால், அதைவிட அதிக பின்னடைவுகளே ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நியூசிலாந்திடம் இந்தியா சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
தினேஷ் கார்த்திக்கும் ஆவேசம்
முன்னதாக, முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். கார்த்திக் தனது சமூக ஊடக பதிவில், ''டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இந்தியாவுக்கு வர முன்பு அணிகள் பயந்தன. இப்போது அந்த ஆதிக்கம் இந்தியாவுக்கு இல்லை. 12 மாதங்களில் இது இரண்டாவது ஒயிட்வாஷ்.
மூன்று தொடர்களில் இரண்டில் ஒயிட்வாஷ்
இந்தியாவில் நடந்த கடைசி மூன்று தொடர்களில் இரண்டு ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு இது கடினமான நேரம், எனவே கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும். இந்தியா அதிக ஆல்-ரவுண்டர்களை நம்பியுள்ளது. வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டி உள்ளூர் சீசனில் 14 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.