
2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான அட்டவணை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், இத்தாலி, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 அணிகள் விளையாடுகின்றன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பிப்ரவரி 12ம் தேதி நபிமீயாவிடன் மோதுகிறது. இந்த போட்டி புது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. அதன்பிறகு உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 18ம் தேதி நெதர்லாந்துடன் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
இதில் இந்திய அணி விளையாடும் ஒரு போட்டி கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 8ம் தேதி நியூசிலாந்து ஆப்கானிஸ்தான், பிப்ரவரி 10ம் தேதி நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகம், பிப்ரவரி 13ம் தேதி அமெரிக்கா நெதர்லாந்து, பிப்ரவரி 15ம் தேதி அமெரிக்கா நெதர்லாந்து ஆகிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
ரசிகர்கள் ஷாக்
இது தவிர சூப்பர் 8 சுற்றில் பிப்ரவரி 26ம் தேதி ஒரு ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் அந்த போட்டியில் இந்தியா மோதுமா? என்பது லீக் போட்டிகளின் முடிவில் தான் தெரிய வரும். ஆகையால் இந்திய அணி ஆட்டம் ஒன்று கூட சென்னையில் நடைபெறவில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் சென்னையில் ஒரு இந்திய மேட்ச் நடக்கும் வகையில் அட்டவணையை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.