நானா இருந்தா ஆஸ்திரேலிய கேப்டன் முகத்துக்கு நேரா சவாலா ஏத்துருப்பேன்.. கோலியை காலி செய்யும் கம்பீர்

By karthikeyan VFirst Published Nov 28, 2019, 3:52 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய கேப்டனின் சவாலை நேருக்கு நேராக நின்று ஏற்றிருப்பேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி முதன்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது. பிங்க் பந்தில் ஆடிய முதல் போட்டியிலேயே இந்திய அணி வங்கதேச அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வங்கதேச அணி அதிகம் டி20 போட்டிகளில் ஆடாத அணி. அதுமட்டுமல்லாமல் அனுபவமற்ற அணி என்பதால், அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணி, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

எப்படியிருந்தாலும் வெற்றி வெற்றிதான் என்பதால் மாற்று கருத்தில்லை. ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைத்தது. ஆனால் இந்திய அணி ஒப்புக்கொள்ளாததால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாது என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டது. 

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு, சூழல்கள் மாற தொடங்கியுள்ளன. பிசிசிஐ தலைவரானதுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தி காட்டியுள்ளார் கங்குலி. அதனால் இனிமேல் இந்திய அணி வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் அழைக்கும்போதும் பகலிரவு போட்டிகளில் ஆட உடன்படும் என்று எதிர்பார்க்கலாம். 

இதை வாய்ப்பாக பயன்படுத்தி இந்திய அணிக்கும் கேப்டன் கோலிக்கும் சவால் விடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேசியிருந்தார். இதுகுறித்து பேசிய டிம் பெய்ன், ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்டில் ஆடுவது குறித்து விராட் கோலியிடம் கேட்போம். அவர் அதற்கு உடன்பட்டால், பிரிஸ்பேனில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடிவிடலாம். கோலி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று டிம் பெய்ன் தெரிவித்திருந்தார். 

டிம் பெய்னின் கருத்துக்கு பைனரியாக விராட் கோலி பதில் சொல்லவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய கேப்டன் விராட் கோலிக்கு விட்ட சவால் எனக்கு பிடித்திருக்கிறது. விராட் கோலி சவாலை ஏற்க தயங்கமாட்டார்; அதிலிருந்து பின்வாங்கமாட்டார் என்பதை அறிந்து சவால் விடுத்துள்ளார். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பிரிஸ்பேனிலோ அல்லது மெல்போர்னிலோ பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடினால் அருமையாக இருக்கும். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்டில் ஆடினால், கண்டிப்பாக ஆஸ்திரேலியா அதை ஸ்மார்ட்டாக மார்க்கெட்டிங் செய்து, மறக்கமுடியாத போட்டியாக நடத்திக்காட்டும். விராட் கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால், டிம் பெய்னின் சவாலை நேரடியாக ஏற்றிருப்பேன் என்று கம்பீர் தெரிவித்தார்.
 

click me!