சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் காட்டடி பேட்டிங்.. டி20யில் மெகா ஸ்கோர் அடித்த மும்பை.. வெறித்தனமா இலக்கை விரட்டிய ஷுப்மன் கில்

By karthikeyan VFirst Published Nov 28, 2019, 1:18 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் போட்டியில் மும்பை வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஆகிய மூவரும் மிரட்டலாக பேட்டிங் ஆடியுள்ளனர். 
 

சையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் சுற்று நேற்றுடன் முடிந்தது. அதில் ஒரு போட்டியில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணிக்கு அதன் தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய பிரித்வி ஷா, 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா. மற்றொரு தொடக்க வீரரான ஆதித்ய தரே 17 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். பிரித்வி ஷாவின் அதிரடியால், மும்பை அணி 8.3 ஓவரில் 83 ரன்களை குவித்தது. அப்போதுதான் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். 

பிரித்வி ஷா ஆட்டமிழந்த பின்னர், அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து அதிரடியை தொடர்ந்த சூர்யகுமார் யாதவும் ஷ்ரேயாஸ் ஐயரும், அவரை விட கடுமையாக அடித்து ஆடினர். சூர்யகுமார் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். இருவரில் ஒருவர் அடித்து ஆடினாலே எதிரணிக்கு ஆபத்து. அப்படியிருக்கையில், இருவருமே அடித்து ஆடியதால் பஞ்சாப் அணி பதறியது. 

பஞ்சாப் பவுலர்கள் போடும் பந்தையெல்லாம் இருவரும் பறக்கவிட்டனர். இருவருமே அரைசதம் அடித்தனர். வெறும் 35 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்த சூர்யகுமார் 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் அவுட்டானபோது 19 ஓவரில் மும்பை அணியின் ஸ்கோர் 223. கடைசி ஓவரில் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் மும்பை அணி 20 ரன்களை குவித்தது. ஷ்ரேயாஸ் 40 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார். மும்பை அணி 20 ஓவரில் வெறு 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது. 

244 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், இலக்கை விரட்டுவதில் உறுதியாக இருந்தார். அதனால் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அவரும் அபிஷேக் ஷர்மாவும் சேர்ந்து பஞ்சாப் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 29 பந்தில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

மும்பை அணியாவது 8.3 ஓவரில்தான் 83 ரன்கள் அடித்தது. ஆனால் பஞ்சாப் அணியோ 7.4 ஓவரில் 84 ரன்களை குவித்தது. முதல் விக்கெட் இழப்பின்போது இதுதான் ஸ்கோர். அதன்பின்னர் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் மன்னும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடினார். குர்கீரத் சிங் மன் 21 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, இலக்கை வெறித்தனமாக விரட்டிய ஷுப்மன் கில் 38 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. கடின இலக்கு என்பதால் மனதை தளரவிட்டு ஆடாமல், கடுமையாக போராடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 221 ரன்களை குவித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 
 

click me!