
சர்வதேச அளவில் அதிகளவில் பணம் புழங்கும் கிரிக்கெட் டி20 லீக் தொடர் ஐபிஎல். 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல்லில், 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. 15வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கிறது. இன்றும் நாளையும் பெங்களூருவில் மெகா ஏலம் நடக்கிறது.
இந்த மெகா ஏலத்தில் 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். இதில் 370 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 220 பேர் வெளிநாட்டு வீரர்கள். மெகா ஏலம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தை பிரிட்டனை சேர்ந்த ஹியூக் எட்மீட்ஸ் நடத்துகிறார். 2008ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை ஐபிஎல் ஏலத்தை நடத்திய ஏலதாரரான ரிச்சர்ட் மேட்லி, தன்னை பிசிசிஐ நடத்திய விதம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிச்சர்ட் மேட்லி, 2018ம் ஆண்டு வரை ஐபிஎல் ஏலத்தை வெற்றிகரமாக நடத்தினேன். 2018ம் ஆண்டு ஏலத்தை முடித்துவிட்டு பிரிட்டனுக்கு திரும்பினேன். அடுத்த சீசனுக்கான ஏலத்தை நடத்துவதற்கு எனக்கு வழக்கம்போல பிசிசிஐஅழைப்பு விடுக்கும் என நினைத்தேன். ஆனால் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 2019லிருந்து ஹியூக் எட்மீட்ஸ் ஐபிஎல் ஏலதாரராக நியமிக்கப்பட்டார். என்னை ஏன் ஒதுக்கினார்கள் என்ற காரணத்தை பிசிசிஐ என்னிடம் தெரிவிக்கவில்லை. நான் ஆற்றிய பணிக்கு எனக்கு நன்றியும் தெரிவிக்கப்படவில்லை. என்னை ஏன் ஐபிஎல் ஏலதாரராக தொடர பிசிசிஐ விரும்பவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. அதன்பின்னர் பிசிசிஐயுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் என் ஃபோன் பிசிசிஐயுடன் தொடர்புகொள்ள தயாராக உள்ளது என்றார் மேட்லி.