இந்திய அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் (52) பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஜான்சன் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டேவிட் ஜான்சன் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். இதில், தனது முதல் ஓவரில் 157.3 கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணிக்காக விளையாடினார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். கடைசியாக டர்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்.
undefined
இதைத் தொடர்ந்து 2001-02 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் வரையில் கர்நாடகா அணிக்காக விளையாடினார். அதன் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஜான்சன், பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். அப்படி தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் தான் பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டேவிட் ஜான்சன் மறைவுக்கு இந்திய அணியின் நட்சத்திரங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதோடு தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.