இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பாரத் ரத்னா விருது பெறுவதற்கான எல்லா தகுதியும் கொண்டுள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இந்திய அணியின் சாதனைக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஒரு காரணமாக இருந்தார். இதையடுத்து டிராபி கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த பரிசுத் தொகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது இன்னும் ஒரு சில இணையதளங்களில் 5 கோடி கிடையாது, ரூ.2.5 கோடி என்று தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, உலகக் கோப்பை இறுதிப் போட்டி, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பையில் வெற்றி என்று பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் வெற்றியின் விளிம்பு வரை சென்றது. இது ஒரு புறம் இருக்க, அண்டர்19 உலகக் கோப்பையையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் பாரத் ரத்னா விருது பெறுவதற்கு தகுதியானவராக இருப்பார் என்று கூறியுள்ளார். இவரது சாதனைகள் நாடு முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் ராகுல் டிராவிட்டிற்கு பாரத் ரத்னா விருதுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவரை பாரத் ரத்னா ராகுல் டிராவிட் என்று அழைப்பதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் மட்டுமே பாரத் ரத்னா விருது பெற்றிருக்கிறார். இது தவிர சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.