
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் எப்போது தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு, பொதுத் தேர்தல் காரணமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே ஏசியாநெட் தமிழ் நியூஸில் செய்தி வெளியிட்டது படி, மார்ச் 22 ஆம் தேதியே ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்குகிறது. மேலும், முதல் போட்டியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது. அதுவும், சிஎஸ்கேயின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இந்தப் போட்டியும் நடத்தப்படுகிறது.
IPL 2024 : வெளியானது ஐ.பி.எல் 2024க்கான அட்டவணை - முதல் போட்டியில் மோதப்போகும் அணிகள் எது தெரியுமா?
இந்த நிலையில் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அட்டவணை வெளியானதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், இனி சென்னை சேப்பாக்கம் சிஎஸ்கேயின் கோட்டையாக இருக்காது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையில் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆர்சிபி கிட்டத்தட்ட சேப்பாக்கத்தில் வெற்றியை நம்ப முடியாத அளவிற்கு நெருங்கிவிட்டது. ஆனால், இன்னும் எல்லையைத் தான் கடக்க முடியவில்லை. அது இந்த சீசனில் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் ஆர்சிபிக்கு சாதகமானதாக மாறி வருகிறது. இனி சேப்பாக்கம் சிஎஸ்கேயின் கோட்டையாக இருக்காது.
கடந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோல்வியை தழுவியிருக்கிறது.
இருந்த போதிலும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி டிராபியை கைப்பற்றியது என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு நடக்கும் 17ஆவது சீசனில் வெளியிடப்பட்ட அட்டவணையின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மார்ச் 22 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மார்ச் 26 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.