எப்படிப்பட்ட பிட்ச்சா இருந்தாலும் அவரைத்தான் எடுக்கணும்.. அணி தேர்வு சர்ச்சை.. முன்னாள் வீரர்கள் கருத்து முரண்

By karthikeyan VFirst Published Mar 5, 2020, 12:56 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வு கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது. 

2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் படுகேவலமான பேட்டிங்கே. அணியின் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை யாருமே சரியாக ஆடவில்லை. அனைத்து பேட்ஸ்மேன்களுமே சொதப்பியதன் விளைவாக, நான்கு இன்னிங்ஸ்களில் ஒன்றில் மட்டுமே 200 ரன்களை கடந்தது இந்திய அணி.

2 போட்டிகளிலும் தோற்று இந்திய அணி ஒயிட்வாஷ் ஆன நிலையில், அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. விக்கெட் கீப்பராக சஹா எடுக்கப்படாமல் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டதை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இந்திய அணியின் அனுபவமான விக்கெட் கீப்பர் சஹா. ஆனால் அவர் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் புறக்கணிக்கப்படுகிறார். இந்திய ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக திரும்பும் என்பதால், ஸ்பின் பவுலிங்கிற்கு விக்கெட் கீப்பிங் செய்வதற்கு சிறந்த விக்கெட் கீப்பர் தேவை. அதனால் ரிஷப் பண்ட்டை விட பன்மடங்கு விக்கெட் கீப்பிங் திறமையும் அனுபவமும் வாய்ந்த ரிதிமான் சஹா, இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்படுகிறார். 

ஆனால் வெளிநாட்டு ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு பெரிதாக சாதகமாக இருக்காது என்பதாலும் வெளிநாடுகளில் விக்கெட் கீப்பிங்கை விட நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய ஒருவர் தேவை என்கிற வகையிலும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுகிறார். 

ஆனால் இந்த காரணத்தை எல்லாம் முன்னாள் வீரர்கள் ஏற்கவில்லை. சஹாவை உட்காரவைத்துவிட்டு ரிஷப் பண்ட்டை எடுத்தது தவறான முடிவு என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ரிஷப் பண்ட் தேர்வை விமர்சித்து சஹாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சந்தீப் பாட்டீல், சஹாவின் பேட்டிங் திறமையை நீங்களாவே குறைத்து மதிப்பிடுவதா? அவர் பல இக்கட்டான சூழல்களில் இந்திய அணியை காப்பாற்றியிருக்கிறார். அவர் திறமையான அனுபவமான விக்கெட் கீப்பர்  மட்டுமல்லாது நல்ல பேட்ஸ்மேனும் கூட. ரிஷப் பண்ட்டிற்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் சஹாவின் கெரியரில் அணி நிர்வாகம் விளையாடுகிறது என்பதை உணர வேண்டும் என்று சந்தீப் பாட்டீல் தெரிவித்திருந்தார். 

சரி, பேட்டிங்கிற்காகத்தான் ரிஷப் பண்ட் எடுக்கப்படுகிறார் என்றால், அதையாவது அவர் ஒழுங்காக செய்ய வேண்டும். ஆனால் பேட்டிங்கில் சொதப்பினார் ரிஷப். அவர் அடித்த 10-20 ரன்களை சஹாவே அடிப்பாரே... 

நியூசிலாந்து டெஸ்ட்டில் சஹாவை எடுக்காமல் ரிஷப் பண்ட்டை எடுத்ததை முன்னாள் வீரர் நயன் மோங்கியாவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய நயன் மோங்கியா, சஹா உடற்தகுதியுடன் இருந்தால், எனது முதல் தேர்வு எப்போதுமே அவர் தான். வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அணி நிர்வாகம் விக்கெட் கீப்பிங்கை விட பேட்டிங்கிற்கே முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளமோ அல்லது ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளமோ, ஆடுகளம் எப்படியிருந்தாலும் சிறந்த விக்கெட் கீப்பர் யாரோ அவரைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று சஹாவிற்கு ஆதரவாக நயன் மோங்கியா கருத்து தெரிவித்துள்ளார். 

Also Read - ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து அதே சர்ச்சையில் சிக்கிய தவான்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை..?

ஆனால் ரிஷப் பண்ட்டை எடுத்ததை பெரிய தவறாக கருதவில்லை ஃபரோக் எஞ்சினியர். இதுகுறித்து பேசிய ஃபரோக், சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது சஹா தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் பேட்டிங் என்றால், கண்டிப்பாக ரிஷப் பண்ட் தான். ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். அதேநேரத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் பெரிதாக எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் செய்ய வேண்டும். நான் அவரது கேப்டனாக இருந்தால், அவரது இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு அறிவுறுத்தியிருப்பேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், ரிஷப் பண்ட் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது என்று ஃபரோக் கூறினார். 
 

click me!