ராஞ்சியில் நடைபெற்று வரும் 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப் வேகத்தில் இஞ்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பென் டக்கெட் 11 ரன்களில் ஆகாஷ் தீப் பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஆலி போப் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ஜாக் கிராவ்லி 42 ரன்களில் ஆகாஷ் தீப் பந்தில் கிளீன் போல்டானார்.
அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். ஒரு கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் 38 ரன்களில் நடையை கட்டினார். இதில், ஒரு சிக்சர் மற்றும் 4 பவுண்டரி அடங்கும். அதன் பிறகு வந்த பென் ஃபோக்ஸ் மற்றும் ரூட் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து கொடுத்தனர். இதில், ஃபோக்ஸ் 47 ரன்களில் சிராஜ் பந்தில் வெளியேறினார்.
அடுத்து வந்த டாம் ஹார்ட்லி 13 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஆலி ராபின்சன் களமிறங்கினார். அவர் 8 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனால், ஆனால், நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்கவில்லை. இந்தியாவிடமும் ரெவியூ இல்லை. தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31ஆவது சதத்தை இன்று பூர்த்தி செய்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரூட் 106 ரன்னுடனும், ராபின்சன் 31 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.