#INDvsENG 2ம் நாள் ஆட்டத்தையும் முழுவதுமாக ஆடிய இங்கிலாந்து! முதல் இன்னிங்ஸை முடிக்க மனமில்லாத அளவுக்கு பயம்

By karthikeyan VFirst Published Feb 6, 2021, 5:27 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 2ம் நாள் ஆட்டத்தையும் முழுவதுமாக ஆடி, 3ம் நாள் ஆட்டத்தை தொடர்வதென்று முடிவெடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் அடித்துள்ளது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிப்ளியும் ரோரி பர்ன்ஸும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு சிப்ளியும் பர்ன்ஸும் சேர்ந்து 63 ரன்களை சேர்த்தனர். பர்ன்ஸ் 33 ரன்னில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழக்க, லாரன்ஸ் பும்ரா பந்தில் டக் அவுட்டானார். அதன்பின்னர் கேப்டன் ஜோ ரூட்டும் சிப்ளியும் இணைந்து சிறப்பாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தனர். ரூட் சதமடிக்க, முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் சிப்ளி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 2ம் நாள் ஆட்டத்தை ரூட்டுடன் ஸ்டோக்ஸ் சேர்ந்து தொடர்ந்தார். ரூட்டும் ஸ்டோக்ஸும் இணைந்து 2ம் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முழுவதும் விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸ், 2வது செசன் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஷபாஸ் நதீமின் பந்தில் 82 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து பல்வேறு சாதனைகளை படைத்த ரூட், 218 ரன்களில் நதீமின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆலி போப் 34 ரன்னிலும், பட்லர் 30 ரன்னிலும், ஆர்ச்சர் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 525 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. நல்ல ஸ்கோர் அடித்திருந்தாலும், அப்போது கூட முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்யாமல், 2ம் நாள் ஆட்டத்தையும் முழுவதுமாக ஆடியது இங்கிலாந்து அணி. 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் அடித்திருந்த நிலையில் 2ம் நாள் ஆட்டமும் முடிந்தது. 3ம் நாள் ஆட்டத்தையும் இங்கிலாந்து அணி தொடர்கிறது.

3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் கிடைக்கும் வரை ரன்களை சேர்த்துவிட்டு, ஆல் அவுட் ஆன பின்னர் தான், முதல் இன்னிங்ஸை இந்தியாவிடம் கொடுக்கும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து. அதற்கு காரணம், இந்த ஆடுகளத்தில் இந்தியாவும் பெரிய ஸ்கோர் அடிக்கும் என்பதுதான். 

சென்னையில் 2016ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் இப்படித்தான், முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. ஆனாலும் அந்த போட்டியில் கருண் நாயரின் முச்சதம்(303*) மற்றும் கேஎல் ராகுலின் அபார சதம்(199) ஆகியவற்றால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 759 ரன்களை குவித்தது. அதனால் முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்தும் கூட, அந்த போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றது இங்கிலாந்து. 

அதில் கற்ற பாடத்தின் விளைவாகத்தான், இங்கிலாந்து அணி ஐநூறுக்கு மேல் அடித்தும், இன்னும் டிக்ளேர் செய்யாமல் எவ்வளவு வருகிறதோ அவ்வளவு ஸ்கோர் வரட்டும் என்று டிக்ளேர் செய்யாமல் ஆடுகிறது. இதிலிருந்து இங்கிலாந்து அணி ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; ஆனால் தோற்றுவிடக்கூடாது என்ற மனநிலையில் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
 

click me!