புதிய வரலாற்று சாதனை படைத்த 18 வயதே நிரம்பிய ரெஹான் அகமது!

By Rsiva kumarFirst Published Dec 20, 2022, 9:42 AM IST
Highlights

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ரெஹான் அகமது தனது அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. தற்போது 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், ஷான் மசூத், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது.

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, ஆலி ராபின்சன், மார்க் உட், ஜாக் லீச்.

அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் எடுத்தது. இதில், பாபர் அசாம் 78 ரன்களும், அகா சல்மான் 56 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 354 ரன்கள் சேர்த்தது. இதில், ப்ரூக் 111 ரன்களும், ஆலி போப் 51 ரன்களும், பென் ஃபோக்ஸ் 64 ரன்களும் சேர்த்தனர். பின்னர், 50 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் பாபர் அசாம் 54 ரன்களும், சௌத் ஷகீல் 53 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ரெஹான் 5 விக்கெட் கைப்பற்றினார்.

வெறும் 18 வயது 126 நாட்களே ஆன ரெஹான் அகமது இங்கிலாந்து அணியில் இடம்பெற்று அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட் கைப்பற்றியது புதிய வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. அறிமுக போட்டியில் 5 விக்கெட் கைப்பற்றும் இங்கிலாந்து வீரர்களில் ரெஹான் அகமது 53ஆவது வீர்ர் ஆவார். ஐசிசி அண்டர்19 ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ரெஹான் அகமது 4 போட்டியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றி அனைவரது பார்வையையும் தன் மீது விழ வைத்தார். அப்படி நடந்ததன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி தனது 2ஆவது இன்னிங்ஸில் 112 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 55 ரன்கள் தேவை. இதே போன்று பாகிஸ்தான் வெற்றி பெற 8 விக்கெட் தேவை.

click me!