பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் கையில் 8 விக்கெட் இருக்கும் நிலையில், வெற்றிக்கு வெறும் 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் இங்கிலாந்து பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்வது உறுதியாகிவிட்டது. சொந்த மண்ணில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகவுள்ளது.
இங்கிலாந்து அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில், தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடிய அசார் அலி 45 ரன்கள் அடித்தார். சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் பாபர் அசாம் 78 ரன்களும், அகா சல்மான் 56 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 304 ரன்கள் அடித்தது.
IPL 2023: ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர்கள்
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக்கின் அபார சதம் (111) மற்றும் ஆலி போப்(51), பென் ஃபோக்ஸின் (64) அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 354 ரன்களை குவித்தது.
50 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியின் அறிமுக ரிஸ்ட் ஸ்பின்னர் ரெஹான் அகமதுவின் சுழலில் சரிந்தது. பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் (54) மற்றும் சௌத் ஷகீல் (53) ஆகிய இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து அணியின் அறிமுக ஸ்பின்னர் ரெஹான் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பாகிஸ்தான் அணி வெறும் 166 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதால், 167 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் இலக்கு எளிதானது என்பதால் கடைசி இன்னிங்ஸில் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி அடித்து ஆடி 41 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் ரெஹான் அகமது 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 3ம் நாள் ஆட்டத்தில் வெறும் 17 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் அடித்துள்ளது. பென் டக்கெட் 38 பந்தில் 50 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
BAN vs IND: 2வது டெஸ்ட்டிலிருந்தும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகல்
4ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு வெறும் 55 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 3-0 என டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்வது உறுதியாகிவிட்டது. பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் இதுவே முதல் ஒயிட்வாஷ் ஆகும். இதற்கு முன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனதே இல்லை.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி சொந்தமண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை அடையவுள்ளது.