#INDvsENG முதல் டி20: 16 ஓவருலயே சோலியை முடித்த இங்கிலாந்து..! இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 12, 2021, 10:13 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடந்தது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ராகுலுடன் தவான் தொடக்க வீரராக இறங்கினார். ராகுல் 2வது ஓவரிலேயே ஆர்ச்சரின் பந்தில் வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேற, கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

தவான் 4 ரன்னில் மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 23 பந்தில் 21 ரன்கள் அடித்து ஏமாற்றமளித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று ஆடியதுடன் அடித்தும் ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். அவர் ஒருவரால் மட்டுமே இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவருடன் ஹர்திக் பாண்டியா சேர்ந்து ஆடும்போது, நம்பிக்கை பிறந்தது.

டெத் ஓவர்களில் பாண்டியா அடித்து பெரிய ஸ்கோரை எட்ட உதவுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 21 பந்தில் 19 ரன்கள் மட்டுமே அடித்து ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார். இப்படியாக ராகுல், கோலி, பண்ட், பாண்டியா என முக்கியமான வீரர்கள் அனைவருமே ஏமாற்றினாலும், ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து, 48 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 67 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, அவரது அதிரடி அரைசதத்தால், 20 ஓவரில் 124 ரன்களை அடித்தது இந்திய அணி.

இதையடுத்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8 ஓவரில் 72 ரன்களை குவித்தனர்.

பட்லர் 28 ரன்னில் சாஹலின் பந்தில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 32 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 49 ரன்களை விளாசிய ஜேசன் ராய் ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு வாஷிங்டன் சுந்தரின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தியதால், அதன்பின்னர் வந்த மாலன் மற்றும் பேர்ஸ்டோவுக்கு வெற்றி இலக்கை எட்டுவது எளிதாக இருந்தது.

16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!