முதல் டி20: ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி அரைசதம்..! ராகுல், கோலி, பண்ட், பாண்டியா சொதப்பல்; இங்கி.,க்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Mar 12, 2021, 8:54 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 20 ஓவரில் வெறும் 124 ரன்கள் மட்டுமே அடித்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு முதல் 2 டி20 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே ராகுலும் தவானும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ராகுல் 2வது ஓவரிலேயே ஆர்ச்சரின் பந்தில் வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேற, கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

தவான் 4 ரன்னில் மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 23 பந்தில் 21 ரன்கள் அடித்து ஏமாற்றமளித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று ஆடியதுடன் அடித்தும் ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். அவர் ஒருவரால் மட்டுமே இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவருடன் ஹர்திக் பாண்டியா சேர்ந்து ஆடும்போது, நம்பிக்கை பிறந்தது.

டெத் ஓவர்களில் பாண்டியா அடித்து பெரிய ஸ்கோரை எட்ட உதவுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 21 பந்தில் 19 ரன்கள் மட்டுமே அடித்து ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார். இப்படியாக ராகுல், கோலி, பண்ட், பாண்டியா என முக்கியமான வீரர்கள் அனைவருமே ஏமாற்றினாலும், ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து, 48 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 67 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, அவரது அதிரடி அரைசதத்தால், 20 ஓவரில் 124 ரன்களை அடித்தது இந்திய அணி.

இது மிகவும் குறைவான ஸ்கோர் என்பதால், இங்கிலாந்துக்கு 125 ரன்கள் என்ற இலக்கு எளிதாக இருக்கும். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

click me!