டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த பிராவோ..!

By karthikeyan VFirst Published Aug 27, 2020, 5:30 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ படைத்துள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்டைம் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ட்வைன் பிராவோ. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழும் பிராவோ, கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

பிராவோ அளவிற்கு யாரும் உலகின் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் அதிகளவில் ஆடியதில்லை என்றே கூறலாம். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் நீண்டகாலமாகவே பிராவோ ஆடாததால், அவர் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருகிறார். 

அதிகமான டி20 போட்டிகளில் பிராவோ ஆடிவரும் நிலையில், 500 டி20 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை பிராவோ படைத்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிவரும் பிராவோ, நேற்று செயிண்ட் லூசியா அணிக்கு எதிரான போட்டியில் கார்ன்வால் மற்றும் ரோஸ்டான் சேஸ் ஆகிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கார்ன்வாலின் விக்கெட், டி20 கிரிக்கெட்டில் பிராவோவின் 500வது விக்கெட். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை பிராவோ படைத்துள்ளார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெறும் 52 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ள பிராவோ, எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் டி20 லீக் தொடர்களில் தான் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக 134 போட்டிகளில் ஆடி 147 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!