லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது வெற்றி பெற்று டிராபியை வென்ற நிலையில் அஸ்வின் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடரின் 8ஆவது சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று டிராபியை கைப்பற்றியது. சென்னையில் நேற்று பெய்த மழையின் காரணமாக இறுதிப் போட்டியானது காலதாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் லைகா கோவை கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது.
இதில், அதிரடியாக விளையாடிய அஸ்வின் 46 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தொடர்ந்து 3ஆவது போட்டியிலும் அஸ்வின் அரைசதம் விளாசியுள்ளார். இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். அவரோடு இந்திய ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் கலந்து கொண்டார்.
முதல் முறையாக சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் – ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டாடும் ரசிகர்கள்!
இதில் சிவம் சிங் ஆரஞ்சு கேப் வென்றார். பொய்யாமொழி பர்பிள் கேப் வென்றார். போட்டிக்கு பிறகு பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருப்பதாவது: சேலம் அணியிடம் தோல்வி அடைந்த அணி நாங்கள் தான். எனினும் அதன் பிறகு வெற்றிகளை பெற்றோம். இந்த தொடரில் நான் ஓபனிங் இறங்கி விளையாடினேன். ஆனால், சரியாக விளையாடாத போது என்னை மிடில் ஆர்டனில் விளையாட வைக்கலாமா என்ற யோசனையில் பயிற்சியாளருடன் ஆலோசனை செய்தோம்.
இதற்கு முக்கிய காரணம் மைதானம் தான். இந்த தொடர் முழுவதும் நான் விளையாடியிருக்கிறேன். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளோம். கடந்த 2 சீசன்களாக தொடர் முழுவதும் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது இந்த சீசனில் நிறைவேறியிருக்கிறது. அதோடு சாம்பியன் டிராபியையும் வென்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா கோவை கிங்ஸிற்கு ஆப்பு வச்ச மழை – 129 ரன்களில் சுருட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ்!