
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 2ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3ஆவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4ஆவது இடத்திலும் உள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்துள்ளது.
ஆனால், டெல்லி அணிக்கு இன்னும் 5 போட்டிகள் உள்ள நிலையில், 5 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது. ஏனென்றால், அதற்கு முன்னதாக அதிக புள்ளிகளுடன் குஜராத், சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரரான அன்ரிக் நோர்க்யா தனிப்பட்ட காரணங்களுக்காக தனது நாட்டிற்கு திரும்ப சென்றுள்ளார்.
இது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனிப்பட்ட அவசரநிலை காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே வெள்ளிக்கிழமை இரவு தென் ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், மீண்டும் அணிக்கு திரும்புவாரா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதுவரையில் அவர் விளையாடிய 8 போட்டிகளில் 32 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அன்ரிக் நோர்க்யா அறிமுகமானார்.