டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
இதில், ஷஃபாலி வர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அடுத்து வந்த அலீஸ் கேப்ஸி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மெக் லேனிங் 41 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 55 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 ரன்னிலும், அன்னபெல் சுதர்லேண்ட் 20 ரன்னிலும், ஜெஸ் ஜோனாசன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக ஷிகா பாண்டே 14 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மேக்னா சிங் 4 விக்கெட்டும், ஆஷ்லெக் கார்ட்னர் 2 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 164 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது.
இதில் தொடக்க வீராங்கனை லாரா வால்வோர்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் பெத் மூனி 12 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்தவர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. குஜராத் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.