முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் 17ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. மார்ச் 24 ஆம் தேதி நடக்கும் 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற நிலையில், குஜராத் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே முகமது ஷமியும் குதிகால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் இந்த சீசனில் ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையில் ராபின் மின்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஏலத்தில் எடுப்பதற்கு கடுமையாக போட்டி போட்டன.
இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் ரூ.3.60 கோடிக்கு ராபின் மின்ஸை ஏலம் எடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் ஷிம்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான ராபின் மின்ஸ் உலகின் பணக்கார டி20 லீக்கில் இடம்பெற்ற முதல் ஆதிவாசி பழங்குடி இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுவரையில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இடம் பெறாத ராபின் மின்ஸ், ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பெறும் கனவில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான், ராபின் மின்ஸ் கவாஸகி பைக்கில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு பைக் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் மின்ஸ் சென்ற கவாஸகி பைக்கின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இது ராபின் மின்ஸில் வலது முழங்காலில் காயங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதையடுத்து ராபின் மின்ஸ் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து ராபின் மின்ஸின் தந்தை பிரான்சிஸ் மின்ஸ் கூறியிருப்பதாவது, மற்றொரு பைக் மீது மோதியதில் தனது கட்டுப்பாட்டை இழந்ததில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
எனினும் இன்னும் 19 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.