லாராவை நிலைகுலைய வைத்த அக்தரின் பவுன்ஸர்..! கிரிக்கெட்டே வேணாம்டா சாமினு நினைத்த சமி

By karthikeyan VFirst Published May 24, 2021, 10:35 PM IST
Highlights

ஷோயப் அக்தர் வீசிய பவுன்ஸரில் பிரயன் லாரா நிலைகுலைந்ததையடுத்து, இனிமேல் கிரிக்கெட் ஆட வேண்டுமா என்கிற அளவிற்கு பயந்ததாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியுள்ளார்.
 

ஃபாஸ்ட் பவுலர்கள் என்றாலே பாகிஸ்தான் தான். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தானியர்களாகவே இருந்துள்ளனர். 

அதிலும் ஷோயப் அக்தர், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங் என உலகின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்கள் பலரை தனது அதிவேகத்தால் அச்சுறுத்தியவர். அதிலும், 2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிமீ வேகத்தில் நிக் நைட்டுக்கு வீசிய பந்துதான், இன்றளவிலும் சர்வதேச கிரிக்கெட்டில் வீசப்பட்ட அதிவேக பந்து. 

தனது கெரியரில் பல பேட்ஸ்மேன்களை தனது மிரட்டலான வேகத்தால் பயப்பட வைத்தவர் அக்தர். அண்மையில் தான், அக்தர் தனது விலா எலும்பை உடைத்த சம்பவத்தை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி, பிரயன் லாராவை அக்தர் நிலைகுலையவைத்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

தனது கெரியரின் தொடக்கத்தில் அக்தரை கண்டு பயந்தது குறித்து பேசிய டேரன் சமி, சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒன்றில்தான் நான் சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமானேன். அதில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நான் ஆடினேன். பாகிஸ்தான் அணி, வக்கார் யூனிஸ், அக்தர், முகமது சமி ஆகிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களுடன் தொடங்கியது.

அந்த போட்டியில் அக்தர் பிரயன் லாராவிற்கு ஒரு பவுன்ஸர் வீசினார். அந்த பவுன்ஸரில் அடி வாங்கிய லாரா, கிட்டத்தட்ட மயக்கமே அடைந்துவிட்டார். அந்த சம்பவத்தின்போது நான் ட்வைன் பிராவோவிற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அக்தரின் பவுலிங்கை பார்த்தபின்னர், இனிமேல் கிரிக்கெட் ஆடவேண்டுமா என்று எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அந்தளவிற்கு எனக்குள் பயத்தை ஏற்படுத்தினார் அக்தர் என்று டேரன் சமி தெரிவித்துள்ளார்.
 

click me!