ஐபிஎல் 2020: டெல்லி கேபிடள்ஸ் அணியிலிருந்து விலகிய அடுத்த வீரர்.. உடனடியாக மாற்று வீரரை அறிவித்து அதிரடி

By karthikeyan VFirst Published Aug 27, 2020, 8:11 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து ஜேசன் ராய் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள 3 அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடள்ஸ் அணியில், அந்த அணி நம்பி எடுத்த சில வீரர்கள் இந்த சீசனிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை தொடரில் தான் பார்க்க வேண்டும்.

ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் படை. ரிஷப் பண்ட், பிரித்வி ஷா உள்ளிட்ட இளம் வீரர்கள் மற்றும் ரஹானே, ஷிகர் தவான், அஷ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் என அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக உள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், இந்த சீசனிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிச் நோர்ட்ஜே ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியில் இருந்த இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் இருந்தார். நாளை முதல் டி20 போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இடுப்புப்பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியில் அவர் நீடிக்கிறார். அவர் உடற்தகுதி பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுவார். 

இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசனிலிருந்து அவர் விலகியுள்ளார். அதிரடி வீரரான ஜேசன் ராயின் விலகல் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு சற்று பின்னடைவுதான் என்றாலும், டெல்லி அணியில் பிரித்வி ஷா, தவான், ரஹானே என போதுமான டாப் ஆர்டர் வீரர்கள் இருப்பதால் பெரிய பாதிப்பாக அமையாது என நம்பலாம். 

ராய்க்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் இடது கை மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான 27 வயது டேனியல் சாம்ஸ் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கில் கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை(30) வீழ்த்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

click me!