IPL 2021 நாலே பந்தில் ஆட்டத்தை திருப்பிய ஜடேஜா..! த்ரில்லான கடைசி ஓவர்.. கடைசி பந்தில் சிஎஸ்கே த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Sep 26, 2021, 7:55 PM IST
Highlights

கேகேஆருக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்றது.
 

ஐபிஎல் 14வது சீசனில் இன்று அபுதாபியில் பிற்பகல் தொடங்கி நடந்த போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது.

அதிரடியாக தொடங்கி, முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசிய ஷுப்மன் கில், முதல் ஒவரின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயரை 18 ரன்னில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

அதிரடியாக ஆடி 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 பந்தில் 45 ரன்கள் அடித்த ராகுல் திரிபாதி ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 20 ரன் அடித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 37 ரன் அடித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தனது ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்தார் தினேஷ் கார்த்திக். 11 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் விளாசினார் தினேஷ் கார்த்திக். இதையடுத்து 20 ஓவரில் 171 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.

172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் டுப்ளெசிஸும் இணைந்து  நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 74 ரன்களை சேர்த்து கொடுத்தனர். 28 பந்தில் 40 ரன்கள் அடித்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். 30 பந்தில் 43 ரன்கள் அடித்து டுப்ளெசிஸும் ஆட்டமிழந்தார்.

மொயின் அலி அடித்து ஆடி 28 பந்தில் 32 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் ராயுடு(10), ரெய்னா(11), தோனி(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த சூழலில், பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கேவின் வெற்றி எளிதானது. கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை வீசிய சுனில் நரைன், சிஎஸ்கேவை எளிதாக வெற்றி பெற அனுமதிக்கவில்லை. கடைசி ஓவரின் முதல் பந்தில் சாம் கரனை வீழ்த்தினார். 2வது பந்தில் ரன் அடிக்காத ஷர்துல் தாகூர், 3வது பந்தில் 3 ரன்கள் அடித்தார். 4வது பந்தில் ரன் அடிக்காத ஜடேஜா, 5வது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் ஒரு ரன்னை அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற செய்தார்.

பரபரப்பான இந்த போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

click me!