ஐபிஎல்லில் இருந்து விலகி இந்தியா திரும்பினார் ரெய்னா..! சோதனை மேல் சோதனை.. சோகத்தில் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Aug 29, 2020, 12:10 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகி, இந்தியா திரும்பியுள்ளார் சுரேஷ் ரெய்னா. 
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பயிற்சியை தொடங்கிவருகின்றனர். 

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் ஒரு மிதவேகப்பந்து வீச்சாளர் உட்பட, அந்த அணியை சேர்ந்த மொத்தம் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சுரேஷ் ரெய்னா, கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார். தோனியின் ஓய்வை அடுத்து, அவரது வழியை பின்பற்றுவதாக கூறி, 33 வயதே ஆன ரெய்னா, திடீரென ஓய்வறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. தோனி - ரெய்னா ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததால், ஐபிஎல்லில் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்லாது, அவர்கள் இணைந்து ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில், ரெய்னா ஐபிஎல்லில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. 

இந்த சமயத்தில் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக சிஎஸ்கே அணி இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக ரெய்னா இந்தியா திரும்பியுள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
 

click me!