சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி வரும் வாரத்தில் சென்னை வந்து தனது பயிற்சியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் நடத்தப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சிஎஸ்கேயின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டேரில் மிட்செல் (ரூ.14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ.8.40 கோடி), ஷர்துல் தாக்கூர் (ரூ.4 கோடி), முஷ்தாபிஜூர் ரஹ்மான் (ரூ.2 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ.1.80 கோடி) மற்றும் அவனிஷ் ராவ் ஆரவெல்லி (ரூ.20 லட்சம்) ஆகியோரை ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில் தான் 17ஆவது சீசன் தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில், சிஎஸ்கே அணியானது இன்னும் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வருகை தர உள்ளது. அதன் பிறகு பயிற்சியை தொடங்க இருக்கின்றனர். முதல் கட்டமாக சிஎஸ்கே கேப்டனான எம்.எஸ்.தோனி அடுத்த வாரத்தில் தொடக்கத்தில் சென்னைக்கு வர உள்ளார். சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார்.
தோனி எப்போது சென்னை வருவார், அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியோடு 5ஆவது முறையாக டிராபியை தட்டி தூக்கியது. இந்த முறையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தான் டிராபியை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.