இங்கிலாந்துக்கு எதிராக வரும் 7ஆம் தேதி நடைபெறும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதாரும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தான் கடைசியாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது. இதுவரையில் நடந்த 4 போட்டிகளில் ரஜத் படிதார், சர்ஃப்ராஸ் கான், ஆகாஷ் தீப், துருவ் ஜூரெல் என்று 4 இளம் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். 4ஆவது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் இடம் பெற்றார்.
தரமசாலாவில் நடக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம் பெற உள்ள நிலையில் ஆகாஷ் தீப் இடம் பெறுவது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று 2ஆவது போட்டியிலிருந்து காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கேஎல் ராகுல் 5ஆவது போட்டியிலும் இடம் பெறமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் 3 போட்டிகள் விளையாடிய ரஜத் படிதார், ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை. அவரது அதிகபட்ச ஸ்கோரே 32 ரன்கள் மட்டுமே. 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விளையாடி வரும் படிதார் 32, 9, 5, 0, 17, 0 என்று 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஆதலால், அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், மீண்டும் ரஜத் படிதாரே அணியில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது எனப்து குறிப்பிடத்தக்கது.