ஐபிஎல் 16வது சீசனிலிருந்து காயத்தால் விலகிய ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் சௌத்ரிக்கு மாற்று வீரராக இளம் ஃபாஸ்ட் பவுலர் ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 16வது சீசன் இன்று தொடங்குகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாகவே தீவிரமாக தயாராகி அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.
இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால், கோப்பையுடன் ஓய்வுபெறும் எண்ணத்தில் உள்ளார் தோனி. சிஎஸ்கே அணியும் அவரை கோப்பையுடன் வழியனுப்பி வைக்கும் முனைப்பில் உள்ளது.
அணியின் காம்பினேஷனை பலப்படுத்துவதற்காகத்தான் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. பேட்டிங் ஆர்டரில் வலுசேர்ப்பதுடன் பவுலிங்கும் வீசுவார் என்பதால் அணியின் பேலன்ஸ் வலுப்படும் என்ற நினைப்பில் அவரை சிஎஸ்கே அணி பெரிய தொகைக்கு வாங்கியது. ஆனால் காயம் காரணமாக அவர் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார். பெரும்பாலும் பந்துவீசமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பந்துவீசாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு.
IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்
சிஎஸ்கே அணியின் தூணாக இருந்துவந்த பிராவோவும் இல்லாததால் ஃபாஸ்ட் பவுலராக தீபக் சாஹர் மட்டுமே இருக்கிறார். அவரும் புதிய பந்தில் ஸ்விங் செய்து வீசக்கூடியவர். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கிடையாது. எனவே சிஎஸ்கே அணி ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் சௌத்ரியைத்தான் நம்பியிருந்தது. அவர்தான் சாஹருடன் 2வது ஃபாஸ்ட் பவுலராக ஆடவேண்டியவர். அவரும் காயத்தால் இந்த சீசனிலிருந்தே விலகிவிட்டார்.
IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி
இந்நிலையில், அவருக்கு மாற்றாக இளம் ஃபாஸ்ட் பவுலரான ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி. 20 வயதே ஆன இளம் இடது கை ஃபாஸ்ட்பவுலரான ஆகாஷ் சிங், 2020ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த அண்டர்19 உலக கோப்பையில் இந்தியாவிற்காக ஆடியவர். ஐபிஎல்லில் 2020 & 2021 ஆகிய 2 சீசன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தார். கடந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. 2 சீசன்கள் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆட வாய்ப்பு பெற்றார். இந்நிலையில், அவரை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி. இடது கை ஃபாஸ்ட் பவுலர் என்ற முறையில் கண்டிப்பாக சிஎஸ்கே அணியின் பவுலிங் யூனிட்டிற்கு அவர் வலுசேர்ப்பார்.