இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் பிராவோவின் ஆலோசனை

By karthikeyan VFirst Published Apr 13, 2019, 2:40 PM IST
Highlights

உலக கோப்பையில் இந்திய அணியில் நான்காம் வரிசையில் யாரை இறக்கலாம் பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், சிஎஸ்கே ஆல்ரவுண்டர் பிராவோவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசை சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதித்த பிறகு, ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராயுடு சொதப்பினார். ஸ்விங் பவுலிங்கை எதிர்கொண்டு ஆட திணறுகிறார். அதேபோல மித வேகப்பந்து வீச்சையும் எதிர்கொள்ள ராயுடு திணறுகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பியதை அடுத்து, ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அணியிலிருந்து நீக்கப்பட்டது, அந்த இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் வேறு வீரரை தேடுவதை உறுதிப்படுத்தியது. 

நான்காம் வரிசைக்கு பல முன்னாள் ஜாம்பவான்களும் பல பெயர்களை பரிந்துரைத்து வருகின்றனர். சூழலுக்கு ஏற்றவாறு விராட் கோலியை நான்காம் வரிசையில் இறக்குவதற்கான திட்டங்களை கூட இந்திய அணி வைத்துள்ளது. 

இதற்கிடையே, நான்காம் வரிசை வீரர் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், நான்காம் வரிசை குறித்த பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் நான்காம் வரிசை இவருக்குத்தான் என்று ஒதுக்குவதை விட சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் எந்த வரிசையிலும் இறக்கலாம். அனைவருமே சிறந்த வீரர்களாகத்தான் உள்ளனர். எனவே ஒவ்வொரு வீரருக்கும் ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு பதிலாக சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை இறக்குவதே சிறந்தது என்று தெரிவித்திருந்தார். 

நடப்பு ஐபிஎல் சீசனில் ஃபார்முக்கு திரும்பி அபாரமாக ஆடிவரும் கேஎல் ராகுலையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராயுடுவையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என வெஸ்ட் இண்டீஸ் வீரரும் சிஎஸ்கேவில் ராயுடுவின் சக வீரருமான பிராவோ கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள பிராவோ, உலகளவிலேயே ஒருசில வீரர்கள்தான் சூழலை புரிந்துகொண்டு ஆடுவார்கள். ராயுடுவும் அவர்களில் ஒருவர். உலக கோப்பையில் இந்திய அணி ராயுடுவையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

click me!