IPL 2021 கோலி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்.. இரண்டே பந்தில் ஆர்சிபியின் கொட்டத்தை அடக்கிய பும்ரா..!

By karthikeyan VFirst Published Sep 26, 2021, 9:23 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்து, மும்பை அணிக்கு 166 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதின. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான விராட் கோலி, முதல் ஓவரின் 2வது பந்திலேயே சிக்ஸரை விளாசினார். தேவ்தத் படிக்கல் 2வது ஓவரிலேயே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்.

அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீகர் பரத் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். கோலியும் அடித்து ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பரத்தும் அடித்து ஆட, ஆர்சிபி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 24 பந்தில் 32 ரன்கள் அடித்திருந்த பரத்தை ராகுல் சாஹர் வீழ்த்தினார்.

அதன்பின்னர் மேக்ஸ்வெல் கோலியுடன் இணைந்து நன்றாக ஆடினார். ஸ்பின் பவுலர்களை ஸ்விட்ச் ஹிட் மூலம் 2 சிக்ஸர்களை விளாசினார். அதிரடியாக ஆரம்பித்த கோலி, பின்னர் மெதுவாக ஆட, 41 பந்தில் 51 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்தார். ஸ்பின்னை மட்டுமல்லாது ஃபாஸ்ட் பவுலர் மில்னேவின் பந்தையும் ஸ்விட்ச் ஹிட் மூலம் சிக்ஸர் அடித்தார்.

அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையுமே 19வது ஓவரில் அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி ஆர்சிபி அணியின் ஸ்கோரை கட்டுக்குள் கொண்டுவந்தார் பும்ரா. 19வது ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா, வெறும் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரை அருமையாக வீசிய டிரெண்ட் போல்ட், கடைசி ஓவரில் வெறும் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

166 ரன்கள் என்பது சவாலான இலக்குதான் என்றாலும், ரோஹித், டி காக், சூர்யகுமார், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா என அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை அணிக்கு இது எளிதாக அடிக்கக்கூடிய இலக்குதான். டிவில்லியர்ஸும் மேக்ஸ்வெல்லும் களத்தில் நின்றபோது, ஆர்சிபி அணியின் ஸ்கோர் 180ஐ தாண்டிவிடும் சூழல் இருந்தது. ஆனால் 19வது ஓவரில் அவர்கள் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஆட்டத்தை திருப்பினார்.
 

click me!