இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று ஒன்னுக்கு ஒன்னு சமநிலை பெற்றன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. பின்னர் 126 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடி 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதோடு, 556 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 557 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இதில், சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசியாக 122 ரன்கள் மட்டுமே எடுத்து 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிஙின் போது அஸ்வின் குடும்ப சூழல் காரணமாக சென்னை திரும்பினார். அதன் பிறகு 4ஆவது நாளில் திரும்ப வந்தார். கடைசி நேரத்தில் பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி 2-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 23 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இதில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் பும்ரா தொடர்ந்து விளையாடிய நிலையில் 4ஆவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட உள்ளது. இதே போன்று ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்வின் இடம் பெறாவிட்டால் அவருக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் ஓய்வு தேவையில்லை என்றால் குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயம் காரணமாக 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இடம் பெறாத கேஎல் ராகுல் தற்போது உடல் தகுதியை எட்டிய நிலையில், 4ஆவது போட்டியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்றால் துருவ் ஜூரெலுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.