ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப சூழல் காரணமாக சென்னை செல்வதற்கும் பின் அங்கிருந்து ராஜ்கோட் வருவதற்கும் பிசிசிஐ தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.
ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இதன் மூலமாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் 2ஆம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு தாயாரது உடல்நிலை சரியில்லாத நிலையில் அவசர அவசரமாக சென்னை திரும்பினார். இதன் காரணமாக 3ஆவது நாளான நேற்று அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் மாற்று வீரராக விளையாடினார். அஸ்வின் இல்லாத நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் மட்டுமே மாறி மாறி பந்து வீசினர்.
இந்த நிலையில் தான் அம்மாவின் உடல்நிலை பிரச்சனை காரணமாக சென்னை திரும்பிய அஸ்வின் அம்மாவின் உடல்நிலை எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் நேற்று நடந்த 4ஆம் நாள் ஆட்டத்தில் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
இதில், அவருக்கு கடைசியாக ஓவர்கள் கொடுக்கப்பட்டது. அதுவரையில் பீல்டிங் செய்தார். இதில், 6 ஓவர்கள் மட்டுமே வீசி ஒரு மெய்டன் உள்பட 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்த நிலையில் தான் சென்னை சென்று எப்படி உடனடியாக ராஜ்கோட் திரும்பினார்? அவருக்கு எப்படி உரிய நேரத்தில் விமானம் கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது.
அஸ்வின் உடனடியாக சென்னை திரும்ப வேண்டும் என்பதற்காக அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னையிலிருந்து ராஜ்கோட் வருவதற்கு அதே விமானமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அஸ்வின் உரிய நேரத்தில் ராஜ்கோட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையின் போது ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.