அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான பேட்டிங்கை மழுங்கடித்த ஆஸ்திரேலிய வீரரின் வெறித்தனமான பேட்டிங்

By karthikeyan VFirst Published Mar 9, 2020, 10:44 AM IST
Highlights

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ஒரே போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸும், ஆஸ்திரேலிய அதிரடி வீரர் பென் டன்க்கும் தாறுமாறாக அடித்து வாணவேடிக்கை நிகழ்த்தினர். 
 

பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. லாகூர் மற்றும் கராச்சி அணிகளுக்கு இடையேயான போட்டி லாகூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி அணி அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 187 ரன்களை குவித்தது. 

கராச்சி அணியின் தொடக்க வீரர் ஷர்ஜீல் கான் வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் 38 ரன்கள் அடித்து அவுட்டானார். மூன்றாம் வரிசையில் இறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்தார். 

ஆறாம் வரிசையில் இறங்கிய சாத்விக் வால்ட்டன், ஹேல்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தன் பங்கிற்கு தானும் சில பெரிய ஷாட்டுகளை விளாசி ரன் உயர்வுக்கு உதவினார். வால்ட்டன், 20 பந்தில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 45 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் சாத்விக் வால்ட்டன் ஆகிய இருவரின் அதிரடியால் 20 ஓவரில் கராச்சி அணி 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லாகூர் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் மறுபடியும் சொதப்பினார். ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார் ஃபகார் ஜமான். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான சொஹைல் அக்தர் சிறப்பாக ஆடினார். மூன்றாம் வரிசையில் இறங்கிய முகமது ஹஃபீஸ் மந்தமாக பேட்டிங் ஆடி 24 பந்தில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

188 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டும்போது, ஃபகார் ஜமான் 5 பந்தில் ரன்னே அடிக்காமல் வெளியேற, ஹஃபீஸ் 24 பந்தில் 16 ரன்கள் மட்டுமே அடித்தார். எனவே லாகூர் அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. ஹஃபீஸ் அவுட்டாகும்போது லாகூர் அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 52 ரன்கள் மட்டுமே. 

அதன்பின்னர் களத்திற்கு வந்த பென் டன்க் தான் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். களமிறங்கியது முதலே சிக்ஸர்களை விளாச தொடங்கிய பென் டன்க், கராச்சி பவுலர்களின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தார். ஒருமுனையில் பென் டன்க் தாறுமாறாக அடித்து ஆட மறுமுனையில் சொஹைல் அக்தர் முதிர்ச்சியுடன் பொறுப்பாக ஆடினார். 

இரக்கமே இல்லாமல் அடித்து ஆடிய பென் டன்க், அரைசதம் விளாசினார். அதன்பின்னரும் சிக்ஸர் மழையை தொடர்ந்தார். வெறும் 40 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று, சிக்ஸர் விளாசி இலக்கை எட்டினார். பென் டன்க்கின் அதிரடியால் 20 ஓவரின் முதல் பந்திலேயே லாகூர் அணி வெற்றி பெற்றது. 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி லாகூர் அணியை வெற்றி பெற செய்தார். 93 ரன்களில் இருந்த பென் டன்க், சிக்ஸர் விளாசி 99 ரன்களை எட்டினார். ஆனால் லாகூர் அணி வெற்றி பெற்றதால் நூலிழையில் சதத்தை தவறவிட்டார். சொஹைல் அக்தரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்களை விளாசியிருந்தார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு! 3 சீனியர் வீரர்கள் கம்பேக்

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லாகூர் அணி அபார வெற்றி பெற்றது. கராச்சி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக ஆடி 48 பந்தில் 80 ரன்கள் அடித்த நிலையில், அவரது அதிரடியான பேட்டிங்கை மழுங்கடிக்கும் விதமாக 40 பந்தில் 99 ரன்களை குவித்து மிரட்டினார் பென் டன்க். 12 சிக்ஸர்களை விளாசி வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவரது பேட்டிங் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது.  

click me!