ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்ததற்கு அவரது மகன் தான் காரணம் - கங்குலி

By karthikeyan VFirst Published Nov 15, 2021, 9:24 PM IST
Highlights

ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்ததற்கான காரணத்தை நகைச்சுவையாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.
 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் முடிவடைந்ததையடுத்து, புதிய பவுலிங் பயிற்சியாளராக பராஸ் மஹாம்ப்ரே மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி.திலீப் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தொடர்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட், இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிய காலத்தில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடாமல், ஒவ்வொரு இன்னிங்ஸையும் அணியின் நலனுக்காக மட்டுமே ஆடிய வீரர். இந்திய அணியை பல இக்கட்டான நேரங்களில் காப்பாற்றி வெற்றி பெற வைத்தவர் ராகுல் டிராவிட். அதனால் இந்திய கிரிக்கெட்டின் சுவர் என அழைக்கப்படுபவர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும்,  இந்திய கிரிக்கெட்டுக்காக அளப்பரிய பங்காற்றிவருகிறார். இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து சிறந்த இளம் வீரர்கள் பலரை இந்திய கிரிக்கெட்டுக்கு உருவாக்கி கொடுத்துவந்த ராகுல் டிராவிட், அதன்பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்துவந்தார்.

இந்நிலையில், ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 17ம் தேதி முதல் இந்தியாவில் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பணியை தொடங்கும் ராகுல் டிராவிட், 2023 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார்.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, டிராவிட் மகன் எனக்கு ஃபோன் செய்து, “என்னிடம்(டிராவிட் மகன்) தந்தை(டிராவிட்) மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்கிறார். அதிலிருந்து என்னை காப்பாற்றுங்கள்” என்று கேட்டான். உடனே நான் டிராவிட்டுக்கு ஃபோன் செய்து, இந்திய அணியுடன் நீங்கள்(டிராவிட்) இணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினேன் என்று நகைச்சுவையாக கூறினார் கங்குலி.
 

click me!