ஹாஸ்பிடலுக்கு போகும்போது என்னால் மூச்சுகூட விட முடியல! உயிரே போனாலும் நாட்டுக்காக போகணும்னு நெனச்சேன்-ரிஸ்வான்

By karthikeyan VFirst Published Nov 15, 2021, 8:30 PM IST
Highlights

அரையிறுதி போட்டிக்கு முன், 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், தனது உடல்நிலை எப்படி இருந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து தொடரை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. 

அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருந்தாலும், முகமது ரிஸ்வான் தனது நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து ஆடிய நிகழ்வு, பாகிஸ்தான் ரசிகர்களை மட்டுமல்லாது உலகளவில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது.

நவம்பர் 9ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 36 மணி நேரம் ஐசியூவில் சிகிச்சை பெற்ற முகமது ரிஸ்வான், 11ம் தேதி நடந்த அரையிறுதி போட்டியில் ஐசியூவில் இருந்து வந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடினார். அபாரமாக ஆடிய ரிஸ்வான் 52 பந்தில் 67 ரன்கள் அடித்தார். 

மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஐசியூவில் சிகிச்சை பெற்ற ரிஸ்வான், உடல்நிலை முழுமையாக சரியாகாத போதிலும், நாட்டுக்காக ஆடிய நிகழ்வு, அனைவரையும் கவர்ந்தது. பாகிஸ்தானியர்கள் அவரை ஹீரோவாக கொண்டாடிவருகின்றனர். வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் அனைவருமே ரிஸ்வானை ஹீரோ என புகழ்ந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முகமது ரிஸ்வான், நான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, எனது குடும்பத்தினர் ஹோட்டலில் இருந்தது. நான் மருத்துவமனைக்கு சென்றபோது என்னால் மூச்சே விடமுடியவில்லை. எனது 2 டியூப்களில் பிரச்னை என்றார்களே தவிர, என்னிடம் முழு விவரத்தையும் கூறவில்லை. 20 நிமிடம் கழித்து நர்ஸிடம் கேட்டேன். அவர் 2 டியூப்கள் கிழிந்துவிட்டதாக கூறினார். நிறைய பரிசோதனைகளை செய்தார்கள்.

அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுக்காக ஆட வேண்டும் என்றேன். ஆனால் மருத்துவர் எனது உடல்நிலை சரியில்லை என்றார். எனக்கு ஏதாவது ஆனால் கூட, அது நான் பாகிஸ்தானுக்காக களத்தில் இறங்கி கிரிக்கெட் ஆடிய பின்னர் தான் நடக்க வேண்டும் என்று மருத்துவரிடம் கூறிவிட்டேன். அதன்பின்னர் அவர்கள் அளித்த ட்ரீட்மெண்ட் வலியை கொடுத்தாலும், என்னை போட்டிக்கு தயார்படுத்தி அனுப்பினார்கள் என்றார் ரிஸ்வான்.
 

click me!